search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ள நோட்டு கும்பல் கைது"

    • துணி வியாபாரி அன்சாரிடம் மகாலட்சுமி நைசாக பேசி நீங்கள் ரூ.29 லட்சம் பணம் கொடுத்தால் நான் எனக்கு தெரிந்தவர்கள் மூலம் ரூ.6 கோடி கள்ளநோட்டு வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
    • ரூ.6 கோடிக்கு ஆசைப்பட்டு துணி வியாபாரி அன்சார் பணத்துடன் தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    பெருந்துறை:

    கேரள மாநிலம் கொச்சின் பகுதியை சேர்ந்தவர் அன்சார் (35) துணி வியாபாரி. இவர் கடந்த 14-ந்தேதி தனது நண்பர் அபிலாஷ் என்பவருடன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதிக்கு வந்தார்.

    பின்னர் சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலை சரளை என்ற பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் 4 பேர் வந்தனர். இதில் 2 பேர் போலீஸ் சீருடையிலும், மற்ற 2 பேர் காக்கி பேண்ட், வெள்ளை சட்டை அணிந்திருந்தனர்.

    பின்னர் அவர்கள் தங்களை பெருந்துறை போலீசார் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டனர். மேலும் அன்சாரிடம் நீங்கள் கருப்பு பணம் கொண்டு வந்து இருப்பதாக தகவல் கிடைத்தது. எனவே உங்கள் காரை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினர்.

    தொடர்ந்து அவர்கள் அன்சார் காரில் இருந்த ரூ.29 லட்சத்தை எடுத்துக் கொண்டு பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கு வந்து உரிய ஆவணங்களை காட்டி விட்டு பணத்தை பெற்று செல்லுமாறு கூறி சென்றனர்.

    இதையடுத்து அன்சார் பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போதுதான் தன்னிடம் பணத்தை பறித்தது போலீஸ் இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து அன்சார் பெருந்துறை போலீசில் தான் கேரளாவில் துணி வியாபாரம் செய்து வருவதாகவும், பெருந்துறைக்கு ஆயத்த ஆடைகள் வாங்க ரூ.29 லட்சம் கொண்டு வந்ததாகவும், அதை போலீசார் என்று கூறி சிலர் பறித்து சென்றதாக தெரிவித்து இருந்தார்.

    இதையடுத்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பெருந்துறை ஏ.எஸ்.பி. கவுதம் கோயல் மேற்பார்வையில் பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், பன்னீர்செல்வம், ராதாகிருஷ்ணன், ஏட்டுகள் பிரவீன், லோகநாதன், தாமோதரன், பாலசுப்பிரமணியம், ராஜா, ரவி மற்றும் காந்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் துணி வியாபாரி அன்சாரிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக கூறினார். இதனால் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் மற்றும் அன்சாரின் செல்போன் உரையாடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் பணத்தை பறித்து சென்ற கும்பல் வந்து சென்ற கார் எண் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

    இதற்கிடையே கேரள துணி வியாபாரி அன்சார் மகாலட்சுமி என்ற பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதையடுத்து போலீசார் மகாலட்சுமியை கண்காணித்தனர். அப்போது அவர் கோவை பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று மகாலட்சுமியை பிடித்து விசாரித்தனர். அப்போது மகாலட்சுமி மற்றும் 4 பேர் இந்த பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மகாலட்சுமியை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை மீட்டனர்.

    மேலும் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவை மதுக்கரை பாலம் அருகே காரில் நின்று கொண்டிருந்த மேலும் 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் தேசம் சத்திரத்தில்புரையான் என்ற பகுதியை சேர்ந்த பஷீர் (49), கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த சேகர் என்கிற ஜனார்த்தனன் (47), பாலக்காடு மேலர்கோடு சிட்லஞ்சேரி பகுதியை சேர்ந்த பாபு (40), பாலக்காடு கண்ணாடி பகுதியை சேர்ந்த சுதீர் (47) என்பது தெரிய வந்தது. இவர்கள் 5 பேர் சேர்ந்துதான் துணி வியாபாரி அன்சாரியிடம் பணத்தை பறித்து சென்றது தெரிய வந்தது. மேலும் இந்த கும்பலுக்கு பஷீர் தலைவனாக செயல்பட்டதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து பெருந்துறைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அவை வருமாறு:-

    துணி வியாபாரி அன்சாரிடம் மகாலட்சுமி நைசாக பேசி நீங்கள் ரூ.29 லட்சம் பணம் கொடுத்தால் நான் எனக்கு தெரிந்தவர்கள் மூலம் ரூ.6 கோடி கள்ளநோட்டு வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதையடுத்து ரூ.6 கோடிக்கு ஆசைப்பட்டு துணி வியாபாரி அன்சார் பணத்துடன் தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து மகாலட்சுமி மற்ற 4 பேருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் முதலில் துணி வியாபாரி அன்சாரை பழனிக்கு வரவழைத்து பணத்தை பறிக்க திட்டமிட்டனர். ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் பணத்தை பறித்தால் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாது என்று கருதி பெருந்துறை பகுதிக்கு வரவழைத்து பணத்தை பறித்து சென்றது தெரிய வந்தது. மேலும் இவர்களுக்கு இருடியம், தங்க பிஸ்கட் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கள்ள நோட்டு கும்பலிடம் இருந்து ரூ.24 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப் பணம், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பாக 7 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். துணி வாங்க வந்த இடத்தில் பணத்தை பறித்து சென்றதாக தவறான தகவல் தெரிவித்த கேரள வியாபாரி அன்சார் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ×